Sunday, March 24, 2024

மின்னணு புத்தகம் (Ebook) பிரசுரிப்பது எப்படி?

 

மின்னணு புத்தகம் (Ebook) பிரசுரிப்பது எப்படி?

நேற்று என் முதல் மின் நூலை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அமேசான் வழியாக வெளியிட்டேன் என்ற அனுபவத்தில் இந்த பதிலை எழுதுகிறேன்.

எத்தனையோ கடைகள் இருந்தாலும் தமிழ் மின் நூல்களுக்கு அமேசான் கிண்டில் தான் சிறந்த கடை. இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மின் நூல்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிக்கப் ஆகிறது. மிக விரைவில் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டாவிட்டாலும், சில ஆண்டுகளில் வாசக் கதவை ராஜ லட்சுமி தட்டுகிற நேரம் தான்.

முதலில் உங்கள் உள்ளடக்கத்தை லதாவின் உதவியோடு பூர்த்தி செய்யவும். எம்ஜிஆரோடு ஜோடியாக நடித்தாரே அந்த லதா அம்மையார் இல்லை. இது லதா என்ற எழுத்துரு, விண்டோஸில் இயல்பாக இருக்கும்.

ஒரு வேர்டு பைலாக(MS-Word) சேமித்துக் கொள்ளவும். அவசியமான படங்களை Embed or copy/Paste செய்யாமல் Insert செய்யவும். JPEG அல்லது TIFF தான் சிறப்பு. அதிகப்படியான படங்கள் உங்கள் பைலின் சுமையை அதிகரித்து விடும்.

அமேசானில் ஒரு கணக்கை துவங்கவும். அமேசான் KDP (KIndle Direct Publishing) என்ற இந்த தளத்தில் நுழையவும். இங்க தான் இனிமே உங்க ஆட்டம் வெறித்தனமா இருக்க போகுது.

அதில் உங்கள் நூலின் தலைப்பு, ஆசிரியர் பெயர் (அட நீங்க தான் பாஸ்!), எல்லாம் வரிசையாக கொடுக்கவும்.

உங்கள் நூலுக்கு ஏற்ற வகையில் புகைப்படமோ அல்லது ஓவியமோ வரைந்து அட்டைப் படம் தனியாக தயார் செய்து வைத்து கொள்ளவும். இது மிகவும் முக்கியம்.

உங்கள் வேர்டு பைலை பதிவேற்றவும். Upload எல்லாம் ஆகும்,

இனிமே தான் சண்டித்தனம் ஆரம்பிக்கும். "Processing FIle" என்று வரும். ஆனால் முழுமையடையாது.

முழுமை பெறாவிட்டால் அடுத்து வரும் பாயிண்டுகளை படிக்கவும்.

  • "Kindle Create" என்ற செயலியை உங்கள் கணினியில் நிறுவவும். இலவசம் தான்.
  • அந்த செயலியில் உங்கள் வேர்டு பைலை (அதான் உங்கள் நூல்) திறந்து, பக்கம் பக்கமாக சரி பார்க்கவும். பின்பு அதை Your_Bookname.kpf என்று சேமிக்கவும்.
  • மறுபடியும் அமேசான் பக்கத்துக்கு வந்து இந்த .kpf பைலை பதிவேற்றவும். 3 நிமிடங்கள் பொறுமை காக்கவும்.

அப்புறம் என்ன, உங்கள் நூலுக்கு விலை நிர்ணயிக்கவும். 70% சதவீத ராய்லடி வேணுமா? அல்லது 35% போதுமா? என்று அமேசான் கேட்கும்.

70% என்றால் நூலின் விலை அதிகமாக வைக்க வேண்டும். வாசகர் மேல் சுமை ஏற்ற வேண்டாம் என நான் 35% ராய்லடி போதும் என்று சொல்லி விட்டேன்.

அமெரிக்கா, பிரான்ஸ், லண்டன், மலேசியா என கோபால் பல்பொடி விற்கும் தேசமெங்கும் உங்கள் நூல் கிடைக்க சந்தையை தேர்வு செய்யவும்.

  • இந்திய சந்தையில் எனது நூல்1, மற்றும் நூல் 2 வாங்க.
  • இது அமெரிக்கா சந்தையில் நூல் கிடைக்குமிடம்.
  • விரைவில் இரண்டாம் தொகுப்பு, ஒரு சிறுகதை தொகுப்பு எல்லாம் எழுத உத்தேசம்.
  • கதை எழுத மூடு வர, லொக்கேஷன் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். பட்ஜெட் இடிக்கிறது.

பட விநயம்: என் அலைபேசி

முக்கிய குறிப்புகள்:

  • உங்கள் நூலுக்கு யாரையாவது தொல்லை செய்து அணிந்துரை(Preface) எழுதி வாங்கவும். நான் மதிவாணன் (BK.Mathivanan) ஜியை படுத்தி எடுத்து விட்டேன்.
  • ஈசான மூலையில் அமர்ந்து மேலே விட்டத்தை பார்த்தோ அல்லது ஒரு பால் பாயிண்ட் பேனாவால் மூக்கை சொறிந்தபடி போஸ் குடுத்து ஒரு வண்ண புகைப்படத்தை நூலாசிரியர் என்று போட்டுக் கொள்ளவும்.
  • ஏதாவது உதவி/சந்தேகமென்றால் தயங்காமல் எனக்கு ஒரு மடலிடவும்.

பின் குறிப்பு: தைரியமாக என் நூலை வாங்கியவர்கள், கோரா போலவே வாக்களிக்காமல், கருத்திடாமல் செல்வது போல செல்லாமல் நாலு வரி விமர்சனம் செய்யவும்.

No comments:

Post a Comment