Friday, March 24, 2017

தங்கள் பூர்வீக குடியிருப்பை விடுவிக்கக்கோரி கடற்படையினருக்கு எதிராக முள்ளிக்குளம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

முள்ளிக்குளம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தங்கள் பூர்வீக குடியிருப்பை விடுவிக்கக்கோரி கடற்படையினருக்கு எதிராக 
(பிராந்திய செய்தியாளர்) 23.03.2017
தொடர்ச்சியாக இருந்து வரும் அகதி வாழ்விலிருந்து விடுபட எமது பூர்வீக காணியை எமக்கு மீளளிக்க வேண்டும் என கோரி மன்னார் முள்ளிக்குளம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மன்னார் முள்ளிக்குளம் மக்கள் யுத்த சூழ்நிலை காரணமாக 2007ம் ஆண்டு அவர்களின் பூர்வீக பகுதியிலிருந்து வெளியேறி பின் 2012ம் ஆண்டு மீள்குடியேறுவதற்காக அங்கு மீண்டும் சென்றிருக்கின்றபோதும் இவர்களின் பூர்வீக குடியிருப்புக்களை கடற்படையினர் ஆக்கிரமித்துக் கொண்டு இவர்களை மீள்குடியேற விடாது தடுத்து வருகின்றனர்.
இதனால் இவ் மக்கள் முள்ளிக்குளத்துக்கு அருகாமையிலுள்ள மலங்காடு என்னும் இடத்தில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.
அத்துடன் பாடசாலை, ஆலயம், விவசாயக் காணிகள் குடியிருப்பு வீடுகள் ஆகியன கடற்படையினரின் ஆக்கிரமிப்பு இடங்களுக்குள் இருக்கின்றன பொது மக்கள் பாடசாலை, ஆலயத்துக்கு சென்றுவர கடற்படையினர் அனுமதி வழங்கியிருக்கின்றபோதும் அங்கு சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை இருந்து வருவதாகவும் இவ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது ஏனைய இடங்களில் பாதுகாப்பு படையினர் ஆக்கிரமித்த காணிகள் பகுதி பகுதியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் மீள்குடியேறுவதற்காக தங்கள் பூர்வீக இடத்துக்கு வந்தும் எங்களை மீள்குடியேற விடாது தடுத்து வரும் கடற்படையினருக்கு எதிராக முள்ளிக்குளம் மக்கள் வியாழக்கிழமை (23.03.2017) கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்
.
முள்ளிக்குளம் கடற்படை முகாமுக்கு முன்பாக பிரதான வீதிக்கு அருகாமையில் மரத்துக்கு கீழ் பதாதைகள் ஏந்தியவர்களாக 'எமது பூர்வீக காணி எமக்கு வேண்டும் 11 ஆண்டு அகதி வாழ்வு போதும் கடற்படையே வெளியேறு எமது நிலத்தை நாம் மீற்கும் வரை அறப்போராட்டம் தொடரும்' என்ற பதாதைகள் ஏந்தியவர்களாக இவ் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இவ் கவனயீர்ப்பு போராட்டம் ஒரு தீர்க்கமான முடிவு எட்டும்வரைக்கும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டதுடன் பெண்கள் ஆண்கள் இரு பாலாரும் இவ் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
.
சிலாபத்துறை பொலிசார் இவ்விடத்துக்கு வருகை தந்து அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன் பிரதேச செயலக அதிகாரியுடன் பொதுமக்களை பேச்சுவார்த்தை நடாத்தி சுமூக நிலையை உருவாக்கவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment