இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின்போது திரைமறைவில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இப்போது மெல்லமெல்ல கசியத் தொடங்கியிருக்கின்றன. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமது பிடிக்குள் வைத்திருந்த கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் அந்தப் ‘பிடி’யை இழந்துவிட்டார்கள் என்பதும், தன்னிச்சையாகச் செயற்படுவதற்கு விக்கினேஸ்வரன் முற்பட்டிருக்கின்றார் என்பது வெளியே தெரியத் தொடங்கியிருக்கின்றது. இறுதியாக விக்னேஸ்வரனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்தியாவின் துணையை நாடும் நிலை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது.
முதலமைச்சரின் ‘இனப்படுகொலை’த் தீர்மானத்தையடுத்தே இந்த விரிசல் தீவிரமடைந்திருக்கின்றது. இந்தத் தீர்மானம் இலங்கை அரசுக்குக் கொடுத்த அதிர்வைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்குத்தான் அதிகளவு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. அதனைவிட, இந்தியா மற்றும் மேற்கு நாடுகளும் இந்தத் தீர்மானத்தினால் குழப்படைந்தன. குறிப்பாக யாழ்ப்பாண விஜயத்தின்போது, விக்கினேஸ்வரனைச் சந்திப்பதை மோடி தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்ற யோசனை ஒன்று முன்வைக்கப்படும் அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்திருந்தன. இதற்கேற்றவகையில் நிகழ்சிநிரலிலும் சில மாற்றங்கள் செய்யப்ப்பட்டன. ஆளுநரின் விருந்துபசாரத்தில் முதலமைச்சரும் கலந்துகொள்ளலாம் என நிகழ்ச்சிநிரல் மாற்றப்பட்டிருந்தது. தனிப்பட்ட சந்திப்புக்கு இடமளிக்கக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கடந்த வருட இறுதியில் டில்லி சென்று மோடியைச் சந்த்திருந்தனர். அந்தக் குழுவில் இணைந்துகொள்ள விக்னேஸ்வரன் மறுத்துவிட்டார். முதலமைச்சரின் செய்தி ஒன்று அப்போது மோடியிடம் கையளிக்கப்பட்டது. இதனைப் படித்த மோடி, புதுடில்லி வருமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்தப் பின்னணியில் யாழ்ப்பாணம் வரும் மோடி, முதலமைச்சரை தனியாகச் சந்தித்துப் பேசுவதை தவிர்ப்பதற்கான திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டதாக தகவல். இதனைடுத்து விக்னேஸ்வரன் தரப்பினர் டில்லியிலுள்ள இந்து தீவிர அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புகொண்டதையடுத்து, அந்த அமைப்பு கொடுத்த அழுத்தத்தின் பெயரில்தான் விக்னேஸ்வரனைச் சந்திப்பதற்கான ஏற்பாடு இறுதித் தருணத்தில் செய்யப்பட்டது. பாரதிய ஜனதா அரசின் மீது அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
அதேவேளையில், விக்கினேஸ்வரனைத் தொடர்புகொண்ட இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர், மோடியுடனான சந்திப்பின்போது அரசியல் பேசுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என வினயமாகக் கேட்டுக்கொண்டார். அதாவது ‘இனப்படுகொலை’ தீர்மானம் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களையிட்டு பேசுவதை இந்தியத் தரப்பு விரும்பவில்லை. கூட்டமைப்பின் தலைமையூடாக இதனைச் சொல்ல முடியாத நிலையிலேயே இந்திய அதிகாரி முதலமைச்சரை நேரில் தொடர்புகொண்டார். இதனையடுத்தே 13 ஆவது திருத்தம் தொடர்பில் விக்னேஸ்வரன் வெளிப்படையான கருத்துக்களை முன்வைத்தார். அதற்கு மேலாக மோடியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
இரு தேசம் ஒரு நாடு
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மைக்காலத்தில் தெரிவித்துவரும் கருத்துக்கள் அரசியலில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரு வாரங்களுக்கு முன்னர் வடபகுதி சென்றிருந்த போது, யாழ். செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் விக்னேஸ்வரன் உரையாற்றினார். அங்கு அவர் தெரிவித்த “ஒரு நாடு இரண்டு தேசங்கள்” என்ற கருத்து தென்னிலங்கையில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கின்றது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கும் கருத்தையே முதலமைச்சரும் அங்கு பிரதிபலித்திருந்தார்.
கூட்டமைப்பிலிருந்து சம்பந்தனும், சுமந்திரனும் வெளியேறி முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் தலைமைபைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு தான் தயாராக இருப்பதாக கஜேந்திரகுமார் அறிவித்திருந்த சில நாட்களிலேயே முதலமைச்சரின் ‘இரு தேசங்கள்’ என்ற கருத்து வெளியாகியது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை இந்தக் கருத்துக்கள் கடுமையாகக் குழப்பியிருக்கின்றது. கஜேந்திரகுமாரின் இந்த அறிவிப்பின் பின்னணியில் ஏதாவது அரசியல் நகர்வுகள் இருக்குமா என்ற சந்தேகத்தை தனக்கு நெருக்கமான சிலரிடம் சம்பந்தன் வெளியிட்டு அவர்களுடைய அபிப்பிராயத்தை கேட்டதாகவும் தெரிகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று மத்தியில் ஒரு ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், விக்னேஸ்வரன் மேற்கொள்ளும் நகர்வுகள் தென்னிலங்கை அரசியலில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். இருந்தபோதிலும், தமிழ் மக்களின் உணர்வுகளையே தான் பிரதிபலிப்பதாக அவர் சொல்கின்றார். உள்நாட்டு அரசியலிலும், இராஜதந்திரிகளுடனான பேச்சுக்களின் போதும் தன்னுடைய இந்த நகர்வுகளில் உள்ள நியாயத் தன்மையை அவர் தெளிவாக வெளிப்படுத்திவருகின்றார். ஒரு அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் ஒரு முன்னாள் நீதியரசர் என்ற முறையில் அவர் தெரிவித்துவரும் கருத்துக்கள் மறுதலிக்க முடியாதவையாக உள்ளன.
சுதந்திரதின பகிஷ்கரிப்பு
பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்ததிலிருந்து அவரது அதிரடி நகர்வுகள் ஆரம்பமானது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சுதந்திரதின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில், விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு கூட்டமைப்பின் மிதவாதிகள் மத்தியில் ஒரு பிளவு உருவாகியிருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியது. சுதந்திரதின வைபவத்தை பகிஷ்கரிப்பதாக தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என சுதந்திரன் தெரிவித்த நிலையில், இதில் பங்குகொள்வதற்கான சூழ்நிலை இதுவரையில் உருவாகவில்லை என விக்னேஸ்வரன் பதிலளித்திருந்தார்.
இது குறித்து இருவரும் தொலைபேசி மூலம் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் உள்ளது. சுமந்திரனின் வாதத்தைக் கேட்ட முதலமைச்சர், “நீங்கள் ஒரு லோயர் போல கதைக்கிறீர்கள். நான் ஒரு நீதியரசராகப் பேசுகிறேன்” எனக் கூறியதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கதை உள்ளது.
அதனையடுத்து,”இனப்படுகொலை” தீர்மானத்தை தானே வட மாகாண சபையில் கொண்டுவந்து அதனை ஏகமனதாக நிறைவேற்றுவதில் விக்னேஸ்வரன் வெற்றி பெற்றார். கடும்போக்கான சிவாஜிலிங்கமோ அல்லது அனந்தி சசிதரனோ இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருவதை விட, மிதவாதியும் முன்னாள் நீதியரசருமான முதலமைச்சர் இந்தத் தீர்மானத்தைக்கொண்டுவந்தமை இதன் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியது. நம்பகத்தன்மையைப் பலப்படுத்தியது.
யாரும் நிராகரித்துவிடமுடியாதளவுக்கு சர்வதேச சட்ட நிபுணர்களின் ஆலோசனையுடன் இந்தப் பிரேரணை தயாரிக்கப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் குறித்த ஒரு ஆவணமாக இது தயாரிக்கப்பட்டிருப்பதும் முக்கியமானதாகும். இதன் பிரதிகள் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் சம்பந்தனும், சுமந்திரனும் தவிர்ந்த ஏனைய தரப்பினர், குறிப்பாக சுரேஷ், அனந்தி போன்றவர்கள் உடனடியாகவே இதனை வரவேற்று அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.
புதிய அரசுக்கு நெருக்கடி
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது ஒத்திவைக்கப்படப்போகின்றது என்பதை உணர்ந்துகொண்ட நிலையிலேயே இனப்படுகொலைப் பிரேரணையைக் கொண்டுவருவது என்ற தீர்மானத்தைதான் எடுத்ததாக முதலமைச்சர் தெரிவித்திருக்கின்றார். கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதுகூட, இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டதற்கான காரணத்தை முதலமைச்சர் விளக்கியிருக்கின்றார். அதனை நியாயப்படுத்தியிருக்கின்றார். பிரேரணை மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் ஜனாதிபதியிடம் நேரில் தெரிவிப்பதற்கு முதலமைச்சர் தயங்கவில்லை.
மறுபுறத்தில் தன்னைச் சந்திக்கவரும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் இது குறித்து அவர் விளக்கம் கொடுத்துவருகின்றார். குறிப்பாக ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன், இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீட் லோகின் ஆகியோருடனான சந்திப்புக்களின் போது இனப்படுகொலைத் தீர்மானம் தொடர்பில் முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டது. முதலமைச்சரின் கருத்துக்களை அவர்களால் ஒரேயடியாக நராகரித்துவிடவும் முடியவில்லை.
புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள தருணத்தில் இவ்வாறான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவது நல்லெண்ணத்தைப் பாதிப்பதாக அமையாதா என்ற கேள்வியைத்தான் இராஜதந்திர வட்டாரங்கள் அவரிடம் நேரில் எழுப்பியிருந்தன. நடைபெற்றவைகளை ஒப்புக்கொள்வதன் மூலமாகவே உண்மையான நல்லிணக்கத்தைக் கொண்டுவரமுடியும் என முதலமைச்சர் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கின்றார். சம்பந்தன் ஏற்கனவே சொல்லிவரும் கருத்துத்தான் இது.
கடும்போக்காகிய மென்போக்கு
விக்கினேஸ்வரணைனப் பொறுத்தவரையில் அவர் ஒரு கடும்போக்காளராக என்றும் கருதப்பட்டவரல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மென்போக்காளர்களாக அடையாளம் காணப்பட்ட ‘மும்மூர்த்தி’களில் அவரும் ஒருவர். முதலமைச்சராகத் தெரிவானவுடன் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்பாக பதவியேற்பதற்கு அவர் எடுத்த தீர்மானம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதற்குப் பின்னரும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் பல நகர்வுகளை அவர் முன்னெடுத்திருந்தார். இதற்கு சார்பான பிரதிபலிப்புக்கள் எதனையும் மகிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி முன்பாக பதவிப் பிரமாணம் செய்தபோது..
முன்னாள் ஜனாதிபதி முன்பாக பதவிப் பிரமாணம் செய்தபோது..
அதிகார மாற்றத்தின் பின்னர் சில சாதகமான நகர்வுகள் இடம்பெற்றன. முதலமைச்சருக்குப் போட்டியாக சமாந்தரமான ஒரு நிர்வாகத்தை நடத்திக்கொண்டிருந்த இராணுவப் பின்னணியைக்கொண்ட அளுநர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மாற்றப்பட்டார். முதலமைச்சருக்கு கட்டுப்படமறுத்த பிரதம செயலாளர் விஜயலக்ஷமியும் அகற்றப்பட்டார். ஆனால், சந்திரசிறியும், விஜயலக்ஷ்மியும் மட்டும்தான் வடபகுதியின் பிரச்சினையல்ல. இருவரையும் மாற்றியவுடன் பிரச்சினை தீர்ந்துவிடப்போவதுமில்லை.
குறிப்பாக – வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என்பதை வடமாகாண தேர்தல் காலத்திலிருந்து விக்னேஸ்வரன் வலியுறுத்திவருகின்றார். இராணுவம் குறைக்கப்படும் நிலையில்தான் மீள்குடியேற்றம் பூரணமாக்கப்படும். இதனைவிட காணாமல்போனோர் பிரச்சினை, கைதிகள் விவகாரம் என்பனவும் உறுத்திக்கொண்டுள்ளன. இவை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் முதலமைச்சர் நடத்திய பேச்சுகள் திருப்திகரமாக அமையவில்லை. அரசுக்கு எதிராக விக்னேஸ்வரன் திரும்பியமைக்கு அதுவும் காரணம். ரணிலைப் பொறுத்தவரையில் இவ்வருட நடுப்பகுதியில் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்த நகர்வுகளை மட்டுமே செய்கிறார். இந்த நிலையில்தான் தன்னுடைய மிதவாதப்போக்கை மாற்றிக்கொள்வதற்கு விக்னேஸ்வரன் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
விக்னேஸ்லரின் இந்த நகர்வுகள் புதிய அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை அதிகரிக்கும் என்பது உண்மை. சர்வதேச அரங்கிலும் சங்கடமான ஒரு நிலையை அரசுக்கு இது தோற்றுவிக்கும். மறுபுறத்தில் தீர்வுகாணப்பட வேண்டிய பல பிச்சினைகள் உள்ளன என்பதை அவரது நகர்வுகள்தான் புதிய அரசாங்கத்துக்கு உணர்த்திக்கொண்டிருக்கின்றன. அதேவேளையில் புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசத்தைக் கொடுக்க வேண்டும் எனக் கருதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும், இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கும் விக்னேஸ்வரின் கருத்துக்கள் எரிச்சலைக்கொடுப்பதாகவே இருக்கும்.
விக்கியைக் கட்டுப்படுத்தும் ஒரு உபாயமாகத்தான் “நாங்கள் அரசியலைப் பார்க்கிறோம். நீங்கள் மாகாண சபை விவகாரங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என கூட்டமைப்பின் தலைமை ஒரு தடையைப் போடப் பார்த்தது. ஆனால், விக்கி அதற்குள் கட்டுப்படுபவரல்ல. அரசியலும் மாகாண சபை விவகாரங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்தவைதானே!
புதிய அரசாங்கத்தைப் பாதுகாப்பதா அல்லது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதா என்ற கேள்விக்கு முதலமைச்சர் பின்னையதைத்தான் தேர்வு செய்துள்ளார் எனத் தெரிகின்றது.
– தமிழ் லீடருக்காக கொழும்பிலிருந்து இராஜயோகன்.
No comments:
Post a Comment