Monday, November 27, 2017

#வீரவணக்கங்கள்! #தமிழீழ_தேசிய_மாவீரர்_நாள்!

 மற்றும் பல்குழல் எறிகணைகள் வீட்டுக்கு மேலால் செல்லும் போது எங்கள் வீட்டிற்கு மேல் தவறியும் விழுந்து விடக் கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டு இரவுகளில் நாங்கள் உறங்கிய போது, எங்கள் நிம்மதியான உறக்கத்திற்காக அங்கே முன்னரங்கில் அவ் வெடித்துச் சிதறும் எறிகணைகளை எதிர்பார்த்த வாறே உணவின்றி உறக்கமின்றி எதிரியை எதிர்த்து சமராடியவர்கள் நீங்கள்.....
வருடாவருடம் தேசியத் தலைவனின் வரலாற்று சிறப்பு மிக்க உரை கேட்க வானொலிப்பெட்டிக்குப் பக்கத்தில் நாம் காத்திருந்த போது, அவ்வுரையின் கனதிக்காக களங்களில் வெற்றித் திலகமிட்டு உரமாகியவர்கள் நீங்கள்.....
வெள்ளை உடுப்புடன் நாங்கள் பள்ளி சென்று பாடம் கற்க, கள்ளிச் செடிகளுக்கும் முட் புதர்களுக்கும், பெரும் காடுகளிலும் வரியுடை தரித்து பயிற்சி முடித்து போர்க்களம் போனவர்கள் நீங்கள்.......
போரைக் காரணம் காட்டி மண்விட்டு ஓடி வெளிநாட்டில் மறைவதற்கு நாங்கள் கொழும்பில் தங்கியிருக்க, மண் மீது பற்றுக்கொண்டு எதிரியின் குகைகளுக்குள்ளேயே வேவுப் புலி வீரர்களாகவும், கந்தகப் பொதிசுமந்த கருவேங்கைகளாகவும் காத்திருந்து எதிரியைக் கருவறுத்தவர்கள் நீங்கள்......
வெளியில் சென்று சற்று நேரம் தாமதித்து வந்தால் பதறித்துடிக்கும் எங்களுக்கு மத்தியில், எதிரியின் காப்பரண்களுக்குள் வேவுக்குச் சென்று வர முடியாமல் அம்மண்ணிலேயே மண்ணோடு மண்ணாகி வித்தாகி வராமலே விட்டவர்கள் நீங்கள்........
எங்கள் எல்லைகளை நாங்கள் புத்தக வரைபடத்தில் தேடிக்கொண்டிருந்த போது, எதிரி எல்லை தாண்டி வந்து விடக்கூடாது என்பதற்காக உங்கள் கைகளால் அடைத்து தாய் மண் காத்தவர்கள் நீங்கள்........
சிறு சிராய்வுக் காயங்களுக்கே வைத்தியரிடம் ஓடும் எங்களுகாக, குண்டுகள் துளைத்து சிதைவடைந்த மேனியிலிருத்து குருதி வழிந்தோடிய போதும் சிறு துணியால் கட்டி விட்டு சீறிப் பாய்ந்து பகை முடித்தவர்கள் நீங்கள்......
கடற்கரைகளுக்கு நாங்கள் சுற்றுலா செல்ல, தாயகக் கடலெங்கும் சுற்றுக் காவல் செய்து கடற்படையினரிடம் இருந்து எங்கள் எங்கள் கடல் வளத்தைக் காத்து நின்று கடல் நீரில் கரைந்தே சென்றவர்கள் நீங்கள்........
அன்னை தந்தை என்று பாசப்பிணைப்பில் நாமிருக்க, அன்னை மண்ணையும் அண்ணையையும் பெரிதென்று நினைத்துக் காத்து நின்று களப்பலியானவர்கள் நீங்கள்........
எம் அன்புக்குரிய மாவீரர்களே!
வீர வணக்கம் போடவே நாம் தகுதியற்றவர்கள்! மன்னிப்பீர்கள். ஏனெனில் நீங்கள் வாழ்ந்ததும் மண்ணில் விதையாகி வீழ்ந்ததும் எங்களுக்காகத் தானே! இருந்த போதும் மனமுருகி வணங்குகின்றோம்!
மறுபிறப்பில் நம்பிக்கையில்லை இருந்த போதும் சொல்கின்றேன் இன்னொரு முறை பிறந்து வாருங்கள்! ஏனெனில் அப்பொழுதும் இனத்திற்காக உயிர்கொடுக்க உங்களால் மட்டும் தான் முடியும்!
அடுத்து வரும் ஆயிரம் தலைமுறைக்கும் சொல்வேன் இன்றைய எங்களின் நல் வாழ்வின் பின்னால் உங்களின் எண்ணற்ற தியாகங்களும் உயிக்கொடைகளும் உண்டென்று!
27.11.2017

No comments:

Post a Comment