(மன்னார் நகர சபையின் இரண்டாவது அமர்வில் ஒலித்தவை)
மன்னார் நகரப்புற எல்லைக்குள் சட்டவிரோத மணல் அகழ்வால் எதிர்காலத்தில் பாரிய விளைவை மன்னார் தீவு எதிர்நோக்கும் நகர சபை அமர்வில் விசனம்
( நிருபர் வாஸ் கூஞ்ஞ) 25.04.2018
மன்னார் நகர எல்லை புறத்தில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு மன்னார் பிரதேச செயலாளரால் அனுமதி பெறப்பட்டு அகழ்வு செய்யப்படுகின்றதா அல்லது சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை முதலில் கண்டறியப்பட வேண்டும். இது விடயமாக ஒரு குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகர சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை அமர்வு நகரப் பிதா ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இரண்டாவது அமர்வாக நடைபெற்றது.
இதில் ஒலித்தவை
செயலாளர்
செயலாளர் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் நகர சபை மண்டபத்தை நகர சபை ஊழியர்களுக்கும் நகர சபை உறுப்பினர்களுக்கும் வருடம் ஒரு முறை மட்டும் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதை தொடர்வதா என முன் வைத்தபோது இதை தொடரலாம் என சபை ஏக மனதாக தீர்மானித்தது.
தற்பொழுது புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான முன் ஏற்பாட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அவசரமாக இவ்விடத்திலுள்ள நகர சபைக்கான கடைகளை நாங்கள் அப்புறப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதில் சில கடைகள் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. இன்னும் ஒன்பது கடைகளை வெளியேற்ற வேண்டியுள்ளது. இதைத் தொடர்ந்து நாங்கள் இவ்விடத்தை யூடிக்கு கையளிக்க வேண்டியுள்ளது என்றார்.
உறுப்பினர் நவ்சீன்
எம்மை நகர சபை ஊழியர்கள் பிரமாண்டமான முறையில் வரவேற்றமைக்கு நான் அனைவர் சார்பிலும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
எம்மை வீதி வழியாக வரவேற்று வந்தபொழுது அதிகமான மக்கள் வீதியோரங்களிலிருந்து உற்று நோக்கியதை நாம் அவதானித்தோம்.
இவர்களுடைய எண்ணக்கருத்து என்னவாக இருந்தது என்றால் எதிர்காலத்திலாவது மன்னார் நகரம் அபிவிருத்தி அடையுமா என்பதாகும். ஆகவே நாம் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டியுள்ளது.
ஆகவே தலைவர் அவர்களே எம் நகரப் பகுதியில் பல தரப்பட்ட மக்கள் வாழ்கின்றபோதும் நாம் அவர்களின் நலன் கருதி அனைவரும் ஒன்றினைந்து செயல்படுவோம். நாங்களும் உங்களுக்கு எங்கள் பூரண ஒத்துழைப்பை நல்குவோம்.
முன்னாள் நகர பிதாவாக இருந்த உங்கள் தந்தை சிறப்பாக வழி நடத்தியதுபோல நீங்களும் கட்சி பேதமின்றி அமைச்சராக இருக்கலாம் பாராளுமன்ற உறுப்பினர்களாக அல்லது மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களிடமிருந்து பெறப்படும் நிதிகளையும் கொண்டு இவ் நகரத்தை அபிவிருத்தி செய்ய முன்வர வேண்டும்.
நாங்கள் உங்களுக்கு எதிர் கட்சியாக இருந்தாலும் நல்ல விடயங்களுக்கு ஒத்துழைக்க பின் நிற்க மாட்டோம். இவ் சபையில் பலதரப்பட்ட கட்சி உறுப்பினர்களாகவும் வேறுபட்ட மதத்தினராக இருந்தாலும் இங்குள்ள 16 உறுப்பினர்களும் ஒன்றுபட்டு செயல்படுவோம் என தெரிவித்தார்.
உறுப்பினர் பிரிந்தாவனநாதன்
இந்த சபையில் ஆளும் கட்சி எதிர் கட்சி என்பது கிடையாது. ஆகவே நாம் எல்லோரும் ஒன்றுபட்டு செயல்படுபவர்கள் என்பதை மனதில் இருத்திக் கொள்வது நலம் என நினைக்கின்றேன் என்றார்.
உறுப்பினர் டிலானி குரூஸ்
இவ் வருடம்தான் பெண்களுக்கு இவ் சபையில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பெண்கள் என்ற ரீதியில் நாங்கள் உங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் நாம் மன்னார் மைந்தர்கள் என்ற உணர்வோடு மன்னார் நகரத்தை அழகுமிக்க நகரமாக்க செயல்படுவோம் என்றார்.
உப தவிசாளர் ஐhன்சன்
இங்கு கன்னி அமர்விலே அனைவரும் ஒன்றினைந்து நல்ல கருத்துக்களை பரிமாறுகின்றபோது மனதுக்கு நல்ல இதமாக இருக்கின்றது. காலையில் எமக்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின்போது இடம்பெற்ற கசப்பான சம்பவத்துக்கு நாங்கள் மன்னிப்பு கோரி நிற்கின்றோம்.
கடந்தது கடந்ததாக இருக்கட்டும் நடப்பவை நல்லதாக நடக்கட்டும். ஏனைய மாவட்டங்களை விட எமது மாவட்டம் தூய்மையாக அழகாக வைக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
நமது செயலகத்தில் நல்ல உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்கள். நாம் நிதி வளத்தைப்பெற்று இவ் நகரத்தை நல்ல மாற்றத்துக்கு கொண்டு வருவோம் என்றார்.
உறுப்பினர் குலதுங்க
உறுப்பினர் குலதுங்க பேசுகையில் மக்கள் நமக்குத் தந்த ஆணையை எமது சிரமேற் கொண்டு மக்களுக்காக கட்சி பேதமின்றி நாங்கள் தவிசாளரின் தலைமையில் நல்ல திட்டங்களை முன்வைத்து செயல்பட எங்கள் ஒத்துழைப்பு என்றும் உண்டு என தெரிவித்தார்.
குப்பை
மன்னார் நகரில் குப்பைக் கொட்டுவதில் இருந்து வரும் பிரச்சனை இன்னும் ஒரு முடிவுக்கும் வரவில்லை. கடந்த காலங்களில் மன்னார் சேமக்காலைக்கு அருகில் கொட்டப்பட்டு வந்ததால் பல பாரிய விளைவுகள் ஏற்பட்டன.
பின் பட்டித்தோட்டப் பகுதியில் கொட்டப்பட்டபோது அங்கு மக்களின் ஆர்பாட்டத்தால் அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.
தற்பொழுது களவான முறையிலேயே குப்பைகளை கொட்ட வேண்டியுள்ளது. குப்பைக் கொட்டுவதற்கு ஒரு சரியான இடத்தை அவசரமாக தெரிந்தெடுக்க வேண்டிய அவசியம் உண்டு. ஒரு மாதத்தால் தற்பொழுது குப்பை கொட்டும் இடம் நிறைந்து விடும் என சபையில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அறுவை செய்யப்படும் விலங்குகள் கழிவுகளை மக்கள் வாழும் சூழலில் கொட்டுவதால் இதனாலும் பாரிய சுகாதார கேடுகளும் நிலவி வருவதால் இது விடயத்தையும் கவனிக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சேமக்காலை
மன்னார் சேமக்காலையை எம்பொழுதும் துப்பரவாக வைத்திருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது. அங்கு மின் ஒளி வசதிகள் மேற்கொள்ளப்படுவதுடன் தண்ணீர் வசதிகளும் செய்யப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
உறுப்பினர் இரட்ணசிங்கம்
இரட்ணசிங்கம்; இங்கு தெரிவிக்கும்போது குப்பைக் கொட்டும் இடத்துக்காக கடந்த ஆட்சி காலம் முதல் மன்னார் அரசு அதிபர் பிரதேச செயலாளர் ஆகியோருடன் நீண்ட காலமாக தொடர்ச்சியாக போராடி வந்தும் இதுவரைக்கும் எமக்கு சாதகமான நிலைமை வரவில்லை. ஆகவே நாம் தொடர்ச்சியாக போராடுவோம். பிரதேச செயலாளருக்கு தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்றார்.
ஆலோசனை சபை
சபை கலைக்கப்பட்டபின் அரசியல் சார்பற்ற ஒன்பது பேர் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று இயங்கி வந்தது. இப்பொழுது புதிய சபை நியமிக்கப்பட்டுள்ளதால் ஆலோசனை குழுவை நியமிப்பது சபைதான் தீர்மானிக்க வேண்டும் என செயலாளர் தெரிவித்தார்.
காணிகள் வழங்கப்படுவது
மன்னார் நகரத்தில் நகர சபைக்கு தெரியப்படுத்தாமல் பிரதேச செயலாளர் தான்தோன்றித் தனமாக அரச காணிகளை வழங்கி வருவதாக முறையீடுகள் கிடைக்கப் பெறுகின்றன. ஆகவே நகர சபையின் அனுமதியின்றி காணிகள் வழங்கக் கூடாது என பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
சுடலைச் சாம்பல்
சுடலைச் சாம்பல் களவாக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. ஆகவே இது ஏதோ ஒரு தீய செயல்பாட்டுக்கு பாவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது விடயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
வருமானம்
கடந்த காலத்தை விட மன்னார் நகர சபைக்கு வருமானம் அதிகரித்து வருவதாக செயலாளரினால் சபையில் தெரிவிக்கப்பட்டது. அதுவும் சோலை வரியே அதிகமாக கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
இறைச்சிக் கடை
மூர்வீதியில் முன்பு இறைச்சிக் கடை இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது இயங்காதிருக்கின்றது என தெரிவிக்கப்பட்டபோது முன்பு ஒரு தனியார் கடையை வாடக்கைக்கு எடுத்து ஏலத்தில் விடப்பட்டு இறைச்சிக் கடை இயங்கி வந்தது. ஆனால் அது சபையின் சட்விரோத செயல்பாடு என தெரிவிக்கப்பட்தையிட்டு மூட வேண்டிய நிலை ஏற்பட்டது என செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே சபைக்கு நிரந்தரமான காணித்துண்டு ஒன்று கிடைக்கும் பட்சத்தில் அங்கு இறைச்சிக் கடை ஒன்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவிடயமாக பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியும் பதில் கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறப்பட்டது.
மணல் அகழ்வு
உறுப்பினர் ஐங்கர சர்மா கருத்து தெரிவிக்கையில் மன்னார் நகர் எல்லைப்பகுதியில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. இது மன்னார் தீவுக்கு எதிர்காலத்தில் பாரிய விளைவை ஏற்படுத்தும் என்பது ஐயமில்லை.
ஆகவே மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க சட்ட விரோமாக இடம்பெறும் மணல் அகழ்வை நாம் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த மணல் அகழ்வுக்கு பிரதேச செயலாளரால் அனுமதி வழங்கப்படுகிறதா அல்லது சட்டவிரோமாக அகழ்வு செய்யப்படகிறதா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டதுடன் ஒரு குழுவையும் நியமித்து நடவடிக்கை எடுப்பது நலம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
(வாஸ் கூஞ்ஞ)
(வாஸ் கூஞ்ஞ)