Tuesday, May 9, 2017

நாற்பது வருட காலமாக மடு பூமலர்ந்தான் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்க மறுப்பாம் எம்.பி.சிவசக்தி ஆனந்தன்.



நாற்பது வருட காலமாக மடு பூமலர்ந்தான் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்க மறுப்பாம் எம்.பி.சிவசக்தி ஆனந்தன்.
(பிராந்திய செய்தியாளர்) 04.05.2017
மன்னார் மடு பிரதேசப் பிரிவில் பூமலர்ந்தான் கிராமத்தில் வசிக்கும் மக்கள் நாற்பது வருட காலமாக அவர்கள் அங்கு வசிக்கின்றபோதும் அவர்களுக்கான குடியிருப்புக் காணிக்கான அனுமதிப் பத்திரம் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருவதால் இவர்களும் நிலவிடுவிப்பு போராட்டத்தில் குதிக்க இருப்பதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த செவ்வாய் கிழமை (02.05.2017) மன்னார் கீரி கடற்கரையில் வட மாகாண முதலமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியிலிருந்து 3.51 மில்லியன் ரூபா செலவில் சுற்றுல்லா மையம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றபோது இதில் கலந்து கொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இங்கு தொடர்ந்து உரையாற்றும்போது
மன்னார் மாவட்டத்தில் இரு பெரிய வளங்கள் காணப்படுகின்றன. ஒன்று கடல் வளம் மற்றையது விவசாயம். கடல் வளத்தை எடுத்தோமானால் மிக பெரிய வளமாக மன்னார் மாவட்டத்துக்கு இயற்கை வளமாக அமைந்துள்ளது.
இதனால் இவ்விடத்தில் ஒரு சுற்றுலா மையத்துக்கு வட மாகாண முதலமைச்சர் தனது அமைச்சின் நிதியை ஒதுக்கி இவ் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு உந்தலாக அமைவதையிட்டு நான் இவ் மாவட்டத்தின் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் முதலமைச்சருக்கும் அவரின் அமைச்சின் அதிகாரிகளுக்கும் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து நிற்கின்றேன்.
மேலும் அமைச்சர் டெனிஸ்வரன் அவர் செல்லும் இடமெல்லாம் எம் மத்தியில் மத, இன ஒற்றுமை திகழ வேண்டும் என மிக துணிவுடன் வலியுறுத்தி வருகின்றார். இது உண்மையில் இக்காலக் கட்டத்தில் அவசியமான விடயமாகவே நான் இதைப் பார்க்கின்றேன்
.
நான் அண்மையில் மன்னார் மடு பிரதேச பூமலர்ந்தான் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு இருக்கும் முப்பதுற்கு மேற்பட்ட மக்கள் மிகவும் கவலையுடன் எனக்கு தெரிவித்தார்கள். அதாவது இவர்கள் இக் கிராமத்தில் குடியேறி நாற்பது வருட காலம் எனவும் இந்த நாற்பது வருட காலத்தில் குடியிருக்கும் காணிக்கான அனுமதிப் பத்திரம் இன்னும் கிடைக்கவில்லை எனவும் இந்த அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்காக நாங்கள் மடு பிரதேச செயலகத்துக்கு பல தடவைகள் ஏறி இறங்கியிருக்கின்றோம். அத்துடன் இது விடமாக நாங்கள் இன்னும் பலரிடம் சென்றிருக்கின்றோம். ஆனால் எங்களுக்கு குடியிருப்புக்கான அனுமதிப் பத்திரங்களை தர மறுக்கின்றார்கள் என்றனர்.
இதற்கு காரணம் இக் காணியானது மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்துக்குரிய காணியாகும். இவர்களிடம் நாங்கள் கேட்கும்பொழுது அவர்கள் எங்களுக்கு கூறும் பதில் நீங்கள் இருக்கும் வரை இருங்கள் ஆனால் நாங்கள் அவற்றை உங்களுக்கு எழுதி தரமாட்டோம் என்கின்றனராம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் எனக்கு தெரிவிக்கையில் எமது பகுதிகளில் மக்கள் நில விடுவிப்புக்காக தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். நாற்பது வருட காலமாக குடியிருக்கும் காணிகளுக்கு அனுமதி பத்திரங்கள் கிடைக்கவில்லையே என்று நாங்களும் மடு வீதி சந்தியில் கொட்டகை அமைத்து போராட்டத்தை முன்னெடுக்கப் போகின்றோம் என்ற அதிர்ச்சியான தகவலை எனக்குச் சொன்னார்கள்.
எங்கள் மக்கள் பாதுகாப்பு படையினருக்கு எதிராக தங்கள் காணிகளை விடுவிக்கக் கோரி போராடுவது வேறுவிடயம். ஆனால் இந்த மக்கள் இவ்வாறான போராட்டம் ஒன்றில் குதிப்பார்கள் என்றால் எமக்கு ஒரு இக்கட்டான நிலை ஒன்று ஏற்படலாம்.
இதை நான் ஏன் இங்கு தெரிவிக்கின்றேன் என்றால் அமைச்சர் டெனிஸ்வரன் இன ஒற்றுமை மத ஒற்றுமைக்காக மிக துணிச்சலுடன் தெரிவிக்கும் இதேவேளையில் நாங்களும் எவ்வளவோ பிரச்சனையில் எங்கோ நிற்கின்றோம். இதனால் எமது மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றபோது எமக்குள் நாம் முட்டி மோதிக் கொண்டிருக்கக் கூடாது என்பதாகும்.
ஆகவே முதலமைச்சர் மற்றும் அவரின் அதிகாரிகள் மக்கள் நலன் கருதி மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்களுக்காக நான் மக்கள் சார்பாக மீண்டும் நன்றி கூறி நிற்பதுடன் எமக்குள்ளே மிக நெருக்கமான ஒற்றுமையையும் கல்வி, பொருளாதாரங்களில் நாம் பலமாக எமது சொந்தக் காலில் நிற்பதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நாங்கள் அவ்வப்போது அவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்
.
இன்று முள்ளிக்குளம் மக்கள் தங்கள் தொடர்ச்சியான போராட்டத்தின் நிமித்தம் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு சென்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இவர்களுக்கு ஆதரவாக எமது மாவட்டத்திலிருந்து பரவலாக பலரும் ஆதரவு வழங்கியிருந்தார்கள். இதனால் அவர்களின் காணி விடுவிக்கப்பட்டது. இவ்வாறு நாமும் ஐனநாயக ரீதியில் பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
(வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment