Sunday, May 21, 2017

எம்மிடையே பிளவுகள் நீங்கி ஒற்றுமை உருவாகும் போதுதான் தமிழினத்துக்கு விமோசனம் கிடைக்கும் அமைச்சர் பா.டெனிஸ்வரன்.



எம்மிடையே பிளவுகள் நீங்கி ஒற்றுமை உருவாகும் போதுதான் தமிழினத்துக்கு விமோசனம் கிடைக்கும் அமைச்சர் பா.டெனிஸ்வரன்.
(பிராந்திய செய்தியாளர்) 19.05.2017
ஆயுதக் குழுக்கள் ஒருவரை ஒருவர் வேட்டையாடியது பிரதேச வாதப் பார்வையில் நடந்து கொண்டது போன்ற செயல்பாட்டினால் பல பின்னடைவை சந்தித்தனர். இன்று நாம் எல்லா இடங்களிலும் ஏட்டிக்குப் போட்டியாக சிலை சுரூபங்கள் வைத்து ஒரு கிராமத்தை இரு கிராமமாக பிரித்து சண்டையிடுவோமாகில் எமது எதிர்கால சந்ததினர் எம்மைவிட பெரும் துன்பங்களுக்கு உள்ளாவார்கள். ஆகவே பெரியோர்கள் நல்வழி காட்ட வேண்டும் என வடக்க மாகாண அமைச்சர் சட்டத்தரனி பா.டெனிஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
வியாழக்கிழமை (18.05.2017) மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் சட்டத்தரனி பா.டெனிஸ்வரன் இங்கு முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையில்
எம் மக்கள் குறிப்பாக பாதிப்பு அடைந்த மக்கள் இந்த நினைவிலிருந்து விலகி நிற்கின்றார்களோ என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. இந்த எட்டாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்த வேண்டும் என்று ஒரு சில தினங்களுக்கு முன் நாம் தீர்மானித்திருந்தோம். நாம் ஒரு இடத்தை ஏற்பாடு செய்யப்பட்டபோது பல பிரச்சனைகள் எமக்குத் தோன்றினும் இந்த இடத்தை நேற்றைய தினம் தெரிவு செய்து இதில் இவ் நிகழ்வை இன்று நடாத்தகின்றோம்.
இந்த இடத்தை தெரிவு செய்தனின் நோக்கம் இந்த பகுதி மக்கள் நேரடியாக பாதிப்பு அடைந்தவர்கள் என்பதாலேயே. எமது முன்னைய தளபதிமார் யுத்தம் புரிந்து மாண்ட இடம் இந்த இடம். ஆயிரக்கணக்கான மக்கள் வராவிடினும் சிலராவது உணர்வு பூர்வமாக இங்கு இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுகின்றீர்கள். அதற்கு நன்றியும் நவிழ்ந்து நிற்கின்றோம்.
இங்கு வந்திருக்கும் நீங்கள் குறிப்பாக பெரியவர்கள் தூரநோக்கோடு சிந்தித்து செயல்பட வேண்டும் என கேட்டு நிற்கின்றேன். காரணம் இதற்குப் பின்னால் ஒரு சில காரணங்கள் இருக்கின்றன.
சமயப் பிரச்சனைகள் இத்துடன் இன்னும் ஒரு சில பிரச்சனைகள் இங்கு அதிகமாக விரிசல் அடைந்து வருகின்றது. மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் குறிப்பாக சமயப் பிரச்சனை தலை விரித்தாடுகின்றது.
அத்துடன் பிரதேச வாதம் என்பது வடக்கு கிழக்குப் பகுதிகளில் தொடர்கின்றது. இவ்விரண்டும் எம் மத்தியில் தலைவிரித்தாடும் என்றால் ஏன் எதற்காக இத்தனை ஆயிரம் பேர் பலி கொடுத்தோம் என்ற கேள்வி எழுகின்றது. இவற்றையெல்லாம் நாம் தூர நோக்கோடு சிந்திக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும்.
இந்த பகுதியில் வேதம் சைவம் என்ற பிரச்சனை தலைதூக்கி நிற்கின்றது. இந்த பிரச்சனைகள் தொடருமானால் இன்னும் பத்து வருடங்களுக்குப் பின் கடந்த கால போராட்டம் உயிர் இழப்புக்கள் யாவும் விலை மதிப்பற்றதாக ஆகி விடும்.
கடந்த காலத்தில் போராட்டம் யுத்தத்தில் இறந்தவர்கள் சாதி சமயம் பார்த்து பிரதேசம் பார்த்து தங்கள் உயிர்களை இழக்கவில்லை. மாறாக அவர்கள் நமது மண்ணுக்காகவும் இனத்துக்காகவுமே ஏன் தங்கள் எதிர்கால சந்ததினர்களுக்காகவே தங்கள் உயிர்களை பணயம் வைத்தார்கள்
.
ஆகவே அவர்களின் உயிர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டுமானால் நாம் எமக்குள் சில விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கு நாம் எல்லோரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். கடந்த கால நிலையை நாம் ஒருமுறை திரும்பி பார்த்தால் எம்மிடையே ஒற்றுமையின்மையே நாம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்களாக இருக்கின்றோம்.
ஆயுதக் குழுக்கள் ஒருவரை ஒருவர் வேட்டையாடியது பிரதேச வாதப் பார்வையில் நடந்து கொண்டது போன்ற செயல்பாட்டினால் பல பின்னடைவை சந்தித்தனர். இருந்தபோதும் எமது தமிழினத்தின் பிரச்சனைகளை உலகம் அறியச் செய்தவர்கள் எமது போராளிகளே என்பதை நாம் மறக்க முடியாது.
ஆகவே நாம் இப்பொழுது இருந்து ஒற்றுமையுடன் செயல்பட தொடங்கினால்தான் நாம் எமது எதிர்கால சந்ததினரை வாழ வைக்க முடியும்.
ஆகவே எல்லா இடங்களிலும் சந்திகளிலும் ஏட்டிக்கு போட்டியாக சிலை வைப்பதும் சுரூபம் வைப்பதும் இதனால் ஒரு கிராமம் இரு கிராமங்களாக பிளவுபட்டு சண்டை பிடிப்பதும். காண்கின்றோம். இவற்றை நிறுத்துவதற்கு பெரியோர்கள் நல்வழி காட்ட வேண்டும். அப்பொழுதுதான் எம்மில் ஒற்றுமை நிகழும். இங்கு பலர் இவ் நிகழ்வில் கலந்து கொள்ளாதது இதுவும் ஒரு காரணமாகும்.
மேலும் நமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் பல மில்லியன் ரூபாவை தாருங்கள் என நாங்கள் மத்திய அரசை கேட்பதைவிட முக்கிய பிரச்சனையாக இருக்கும் இவ் பிரச்சனைகளை இந்த அரசு செய்ய வேண்டும் என்றுதான் நாம் கேட்டு நிற்கின்றோம்.
அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முடிவு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இது விடயமாக எமது மக்கள் நிம்மதியின்றி வீதிகளில் உறங்குவதும் சாப்பிடுவதுமாக இருக்கின்றார்கள்.
அடுத்து எமது தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றனர். பொது மக்களின் காணிகள் தொடர்ந்து படையினரிடம் கைவசம் இருக்கின்றன. ஆகவே அபிவிருத்தி இன்று இல்லாவிட்டாலும் நாளை அதை அடைந்து விடலாம். ஆனால் இந்து மூன்று பிரச்சனைகளுக்கும் அரசு உடன் தீர்வு பெற்றுத் தர வேண்டும் என நாம் கேட்டு நிற்கின்றோம் என்றார்.
(வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment