Thursday, May 4, 2017

மரியன்னை திருச்சுரூபத்தை ஏந்தியவர்களாக செபமாலை பவனியுடன் கிராமத்துக்குள் நுழைந்தனர் முள்ளிக்குளம் மக்கள்

மரியன்னை திருச்சுரூபத்தை ஏந்தியவர்களாக செபமாலை பவனியுடன் கிராமத்துக்குள் நுழைந்தனர் முள்ளிக்குளம் மக்கள்
(பிராந்திய செய்தியாளர்) 30.04.2017
கடந்த பதினொரு வருடங்களாக நடாத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் போராட்டங்கள் அத்துடன் 38 நாட்களாக தொடர்ச்சியாக பெண்கள் தலைமைத்துவம் கொண்டு முள்ளிக்குளம் மக்கள் தங்கள் பூர்வீக கிராமத்துக்குள் மீள்குடியேற அனுமதிக்கக் கோரி நடாத்தப்பட்டு வந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் காரணமாக உயர்மட்ட பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து முள்ளிக்குளம் மக்கள் தங்கள் கிராமத்துக்குள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதும் மரியன்னை திருச்சுரூபத்தை ஏந்தியவர்களாக செபமாலை பவனியுடன் கிராமத்துக்குள் நுழைந்தனர்.
இவ் சம்பவம் சனிக்கிழமை (29.04.2017) இடம்பெற்றுள்ளது
.
மன்னார் முள்ளிக்குளம் மக்கள் யுத்த சூழ்நிலை காரணமாக 2007ம் ஆண்டு அவர்களின் பூர்வீக பகுதியிலிருந்து இராணுவத்தால் வெளியேற்றப்பட்டு பின் 2012ம் ஆண்டு மீள்குடியேறுவதற்காக அங்கு மீண்டும் சென்றிருந்தபோதும் இவர்களின் பூர்வீக குடியிருப்புக்களை கடற்படையினர் ஆக்கிரமித்துக் கொண்டு இவர்களை மீள்குடியேற விடாது தடுத்து வந்திருந்தனர்
இதனால் இவ் மக்கள் முள்ளிக்குளத்துக்கு அருகாமையிலுள்ள மலங்காடு என்னும் காட்டுப்பகுதியில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து வசித்து வந்தனர்.
அத்துடன் பாடசாலை, ஆலயம், விவசாயக் காணிகள் குடியிருப்பு வீடுகள் ஆகியன கடற்படையினரின் ஆக்கிரமிப்பு இடங்களுக்குள் இருக்கின்றன எனவும் மாணவர்கள் பொது மக்கள் பாடசாலை, ஆலயத்துக்கு சென்றுவர கடற்படையினர் அனுமதி வழங்கியிருந்தபோதும் அங்கு சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை இருந்து வந்ததாகவும் இவ் மக்கள் கவலை தெரிவித்தவர்களாக முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை மூலம் அரசியல் மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு தரப்பினருடனும் பேச்சு வார்த்தைகள் நடாத்தப்பட்டு வந்தன.
பேச்சு வார்த்தைகள் பலன் அளிக்காத நிலையில் இவ் மக்களால் காலத்துக்கு காலம் கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந் நிலையில் ஏனைய இடங்களில் பாதுகாப்பு படையினர் ஆக்கிரமித்த காணிகள் பகுதி பகுதியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததை அறிந்து மீள்குடியேறுவதற்காக தங்கள் பூர்வீக இடத்துக்கு வந்தும் எங்களை மீள்குடியேற விடாது தடுத்து வரும் கடற்படையினருக்கு எதிராக முள்ளிக்குளம் மக்கள் 23.03.2017 முதல் இவ் கடற்படை முகாமுக்கு எதிரே கடந்த 38 தினங்களாக மரத்துக்கு கீழ் பதாதைகள் ஏந்தியவர்களாக 'எமது பூர்வீக காணி எமக்கு வேண்டும் 11 ஆண்டு அகதி வாழ்வு போதும் கடற்படையே வெளியேறு எமது நிலத்தை நாம் மீற்கும் வரை அறப்போராட்டம் தொடரும்' என்ற பதாதைகள் ஏந்தியவர்களாக இவ் போராட்டத்தை இராப்பகலாக இருந்து பெண்கள் தலைமைத்துவத்தில் தங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்திருந்தனர்.
இந் நிலையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அண்மையில் பாராளுமன்றத்தில் எழுப்பிய குரலைத் தொடர்ந்தும் பிரதமர், ஐனாபதி ஆகியோருடன் கொண்ட தொடர்பை முன்னிட்டும் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் கொழும்பில் மீள்குடியேற்ற அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆயர் இல்ல பிரதிநிதிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் வன இலாகா அதிகாரிகள், முள்ளிக்குளம் கிராம பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் நடாத்தப்பட்ட பேச்சு வார்த்தையைத் தொடர்ந்தே சனிக்கிழமை (29.04.2017) முள்ளிக்குளம் முகாமில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இவ் கிராமம் உடன் விடுவிக்கப்பட்டு தற்பொழுது இவ் மக்கள் கிராமத்துக்குள் மீள் குடியேற சென்றுள்ளனர்.
இவ் அனுமதி கிடைக்கப் பெற்றதும் சனிக்கிழமை (29) மூன்று மணியளவில் கவனயீர்ப்பு முள்ளிக்குளம் மக்கள் போராட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பதாதைகள் அணைத்தையும் நீக்கிவிட்டு இவ் போராட்ட இடத்தில் வைத்து வழிபட்டு வந்த தேவ அன்னையின் திருச்சுரூபத்தை ஏந்தியவர்களாக தங்கள் கிராமத்துக்குள் செபமாலை பவனியுடன் சென்று ஆலயத்தினுள் தங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை (30.04.2017) இவ் கிராம மைந்தன் அருட்பணி சுபீன் றெவ்வல் (அ.ம.தி) அடிகளார் தலைமையில் முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி மாக்கஸ் அடிகளார், பங்குத்தந்தை அருட்பணி அன்ரன் தவராஐ; அடிகளாருடன் அவ் கிராம மக்கள் இறைவனுக்கு நன்றி திருப்பலி ஒப்புக் கொடுத்ததுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண சபை அமைச்சர் பா.டெனிஸ்வரன், இதன் உறுப்பினர்கள் வைத்திய கலாநிதி ஐp.குணசீலன், சிராய்வா ஆகியோரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(வாஸ் கூஞ்ஞ)

No comments:

Post a Comment