Monday, November 27, 2017

*அவர்களின் அகத்தில் நிலம் இருந்தது. அகழ்ந்தனர். -போல் செலான்.

*அவர்களின் அகத்தில் நிலம் இருந்தது. அகழ்ந்தனர்.
 -போல்  செலான்.
1987ஜூலை மாதத்தின் இறுதி நாட்கள். இந்தியப் படை யினர் பெருங்கவச வாகனங்களில் பல்லாயிரக்கணக்காக வடக்கு நோக்கி வந்துகொண்டிருந்தபோது யாழ்ப் பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி நான் சென்றேன். என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றவர்கள் Saturday Review வார இதழின் ஆசிரியர் காமினி நவரத்னவும் இன்னொரு நெருங்கிய நண்பரும் (அவருடைய பெயரை இப்போதைக்குத் தவிர்த்துவிடுகிறேன்.) காமினி நவரத்ன இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர்; 1983 ஜூலைப் படுகொலைகளின்போது தடைசெய்யப்பட்டிருந்த சற்றர்டே றிவியூ இதழ் மறுபடியும் ஒழுங்காக வெளிவரக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர். பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை ஏற்கப் பலரும் தயங்கிய வேளை துணிவுடன் அதனை ஏற்றுக்கொண்டவர். பத்திரிகைத் துறையில் எனது வழிகாட்டி; சிங்களவர்.
கொழும்புவில் மகரகமவிலிருந்த காமினியின் வீட்டில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்தபோது இலங்கை இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரான தீவிரமான போராட்டம் வெடித்தது. ஜே.வி.பியும் அதனோடு இணைந்த பலரும் மகரகம சந்தியில் இலங்கை அரசுக்குச் சொந்தமான பல வாகனங்களுக்குத் தீ வைத்தபோது நானும் காமினியின் மைத்துனரும் மகரகம சந்தியிலிருந்து காமினியின் வீட்டுக்குச் செல்லும் சிறு தெருவில் ஓட்டோவுக்காகக் காத்திருந்தோம். நான்கு பிக்குமார் அந்த அழிப்பில் முன்னணி வகித்தார்கள். கடைகள் சிலவும் கொளுத்தப்பட்டன.
மகரகம பாதுகாப்பில்லை என உணர்ந்த காரணத்தால் குமாரி ஜயவர்த்தனவின் ஏற்பாட்டில் ஹெந்தல எனும் இடத்தில் அமைந்திருந்த அவரது கடலோர வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தேன்.
அந்த நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் நான் பணிபுரிந்து வந்த சற்றர்டே றிவியூ அலுவலகத்துக்கு இந்தியப் படையின் உயரதிகாரிகள் சிலர் ‘நல்லெண்ண விஜயம்’ மேற்கொண்டிருந்தார்கள். ஆசிரியர் காமினி நவரத்னவும் நானும் அங்கிருக்கவில்லை என்பதால் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான கனக ராஜநாயகத்தை அவர்கள் சந்தித்தார்கள். அவர் துணிச்சலானவர். அவரை ‘ஆடு’ என்றுதான் ஏ.ஜே. அழைப்பார். அந்தச் சந்திப்பு நல்ல அறிகுறி அல்ல என்பது நமது நிறுவனத்தினருக்கு அப்போதே தெரிந்துவிட்டது. எமது அச்சகம், அலுவலகம், எம்மிடம் இருந்த கோப்புகள் எல்லாவற்றையும் அவர்கள் பார்வையிட்டார்கள். எமது கருத்தியல் என்ன என்று கேட்டார்கள். ‘சேரன் ருத்ரமூர்த்தியைக் கட்டாயம் பார்க்க வேண்டும். அழைத்து வர முடியுமா?’ என்று பணிப்பாளரைக் கேட்டார்கள். நல்ல காலம். அப்போது நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிவிட்டேன்.
பத்திரிகை ஆசிரியர் குழுவில் பலருக்கும் அதன் நிர்வாகத்தைக் கவனித்து வந்த விஸ்வலிங்கத்துக்கும் பல காலமாக நல்லுறவு இருக்கவில்லை. எனவே பத்திரிகை தொடர்பான முக்கியமான தீர்மானங்கள் எடுப்பதில் எப்போதும் முரண்பாடுகளும் குழப்பங்களும் ஏற்படும்.
ஆகஸ்ட் இரண்டாம் வாரம் நான் இலங்கையை விட்டு வெளியேறி நெதர்லாந்துக்குச் சென்றேன். ஓரிரு மாதங்களில் மறுபடியும் போர் ஆரம்பமாகிவிடும் என்பதையும் ஊகித்திருந்தேன். இப்படி ஊகிப்பதற்கு நுண்ணறிவு எதுவும் அன்று தேவைப்பட்டிருக்கவில்லை. ஆகஸ்ட் 22, 1987இல் நயினாதீவிலும் முல்லைத்தீவிலும் தமிழ் மக்கள்மீது இலங்கைப் படையால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பூநகரியில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் எங்கள் பத்திரிகை, செய்தி வெளியிட்டது. ‘Accord Runs into Snags?’ என்று தலைப்பிட்டு ஏ.ஜே. எழுதியிருந்தார். ஆகஸ்ட் 18, 1987 அன்று ஜே.ஆர். ஜயவர்த்தன மீதும் அவரது அமைச்சரவை மீதும் நடத்தப்பட்ட கைக்குண்டு வீச்சில் மாவட்ட அமைச்சர் கீர்த்தி அபேவிக்கிரம கொல்லப்பட்டார். பிரேமதாச, லலித் அதுலத்முதலி ஆகியோர் காயமடைந்தனர். ஒப்பந்தத்தை எதிர்த்த தென்னிலங்கைக் கட்சிகளின் ஆதரவாளர்கள், உறுப்பினர்களுள் சிலரே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்த என் நண்பர்கள் சிலர், “சண்டையைத் தவிர வேற வழி இல்லை. ஆனால் எப்ப மூளும் என்றுதான் சொல்ல முடியாமல் இருக்கிறது,” என்று சொன்னார்கள்.
பிற்பாடு திலீபன் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தமை, இடைக்கால நிர்வாக அமைப்பை வடக்குக் கிழக்கில் ஏற்படுத்துவதற்கு ஜே.ஆர். அரசு ஏற்படுத்திய நெருக்கடிகள், குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பிற உறுப்பினர்கள் கடலில் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட சிக்கலும் அவர்கள் தற்கொலை செய்தமையும், ஒப்பந்தம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் அவநம்பிக்கை, இந்திய உளவுச் சேவை மற்றைய இயக்கங்களுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்க ஆரம்பித்தமை, ஜே.என். தீக்ஷித்தின் அகங்காரம் மிக்க செயற்பாடுகள் எனப் பல்வேறு காரணங்களால் இந்தியப்படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அக்டோபர் 11, 1987 போர் மூண்டது.
சற்றர்டே றிவியூ வெளிவருவது சாத்தியமில்லை என்பது ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் ஒக்டோபர் 17 அன்று வரை பத்திரிகை வெளியாகியது. இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட கொக்குவில், தலையாழிப் படுகொலைகள், பிரம்படிப் படுகொலைகள் போன்றவற்றை விவரமாக வெளியிட முடிந்திருந்தாலும் ஈழமுரசு, முரசொலி ஆகிய நாளிதழ்களையும் விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி ‘நிதர்சன’த்தின் ஒளிபரப்புக் கோபுரத்தையும் வெடிவைத்துத் தகர்த்ததுபோல சற்றர்டே றிவியூ தகர்க்கப்படவில்லை. எல்லாவற்றையும் மூடிவிட்டுச் சென்றுவிட வேண்டும் அல்லது வெடிவைப்போம் என்ற எச்சரிக்கை மட்டுமே விடப்பட்டது. போர் உக்கிரமாக நிகழ்ந்தபோதும் இந்தியப் படையினர் நிகழ்த்திய படுகொலைகள் பற்றிய தகவல்களும் விவரங்களும் கொழும்பு ஊடகங்களில் வரவில்லை அல்லது அவற்றுக்கு முற்றாகத் தெரிந்திருக்கவில்லை. அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் தங்கிநின்று சற்றர்டே றிவியூக்கு எழுதிக்கொண்டிருந்த டி.பி.எஸ். ஜெயராஜ் கொழும்புவுக்குத் தப்பிச் சென்று அங்கே விவரமாகக் கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்தபோதுதான் இந்தியப்படையின் படுகொலைகளும் தாக்குதல்களும் பற்றிய விவரங்கள் பரவலாகத் தெரிய ஆரம்பித்தன.
அக்டோபர் 21, அன்று யாழ் மருத்துவமனைப் படுகொலைகள் நிகழ்ந்த பிற்பாடு கொழும்புவிலிருந்து காமினி நவரத்தின New Saturday Review என்று ஒரு பத்திரிகையை வெளியிடத் தொடங்கினார். அது  போட்டோகாப்பி  (xerox) வடிவத்திலேயே முதலில் வெளியிடப்பட்டது. அதன் முதலாவது இதழிலேயே படுகொலைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.
New Saturday Reviewஇதழ்களைக் காமினி நவரத்தின உடனுக்குடன் நெதர்லாந்திலிருந்த எனக்கு அனுப்பிவைப்பார். அங்கே அவ்விதழ்களின் இன்னொரு பதிப்பை நானும் அங்கு படித்துக்கொண்டிருந்த சித்திரலேகா மௌனகுருவும் வெளியிட்டு ஐரோப்பாவிலுள்ள செய்தி நிறுவனங்களுக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அனுப்பிவந்தோம். இந்த வெளியீட்டைச் செய்ய எம்முடன் பணிபுரிந்தவர்கள் பேரா. றேச்சல் கூரியன், பேரா. அம்ரிதா சாச்சி, யான் பிரெண்ஸ்மா ஆகியோர். இவர்கள் அனைவரும் நெதர்லாந்தில் நான் கல்விகற்ற Institute of Social Studies என்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவர்கள். அங்குதான் நானும் சித்திரலேகாவும் சுனிலா அபேசேகராவும் படித்துக்கொண்டிருந்தோம்.
றேச்சல் கூரியன் என்னுடைய ஆய்வு நெறியாளராக இருந்தவர். இலங்கை மலையக மக்களின் குடியுரிமைச் சிக்கல்கள், கூலி உழைப்பின் நெருக்கடிகள் பற்றிய பல ஆய்வுகளைச் செய்தவர். இந்து ராம், கலாநிதி நீலன் திருச்செல்வம் போன்ற ஆளுமைகள் றேச்சல் கூரியனின் நண்பர்கள். நெதர்லாந்து வந்தால் அவர்கள் றேச்சல் கூரியனின் வீட்டில் தங்குவது வழமை. எங்களுடைய இலக்கிய, அரசியல் ஒன்றுகூடல்கள் பலவும் அவரது வீட்டிலேயே நடைபெறுவது வழக்கம். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நா. சண்முகதாசன், Saturday Review / TRRO நிறுவனர் கந்தசாமி ஆகியோர் நெதர்லாந்து வந்திருந்தபோதும் றேச்சல் கூரியன் வீட்டிலேயே ஒன்றுகூடல்கள் நிகழ்த்தியிருந்தோம்.
1987 நவம்பர் மாதம் முதல் வாரம் என்று நினைவு. இந்து ராம் நெதர்லாந்து வருகிறார் என்று றேச்சல் கூரியன் சொன்னார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தினதும் இந்தியப் படைகளதும் தீவிரமான ஆதரவாளராக அவர் இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. எனினும் இந்தியப் படைகளின் படுகொலைகள், அண்மைக்கால நிகழ்வுகள் பற்றி அவருடன் கலந்துரையாடலாம் என றேச்சல் கூரியன் கருதினார். இரவுநேரச் சிறு ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்தார் அவர்.
New Saturday Reviewவின் இரண்டு இதழ்களை அப்போது வெளியிட்டிருந்தோம். யாழ். மருத்துவமனைப் படுகொலைகள், பிரம்படிப் படுகொலைகள், யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும் நூலகத்திலும் இந்தியப் படையினர் பலர் மலங்கழித்து மாசாக்கிய அவலம் பற்றிய விரிவான செய்திகள் அவற்றில் வெளிவந்திருந்தன.
இந்து ராமுடனான உரையாடல் தொடக்கத்தில் இணக்கமாக இருந்தாலும் இந்தியப் படையினரின் படுகொலைகளைப் பற்றிப் பேசியபோது கடினமாக மாறிவிட்டது. ‘ஒரு கையைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டுதான் அவர்கள் போர் புரிகிறார்கள்; மிகப் பண்பட்ட படையினர் அவர்கள். நீங்கள் சொல்கிற மாதிரி எத்தகைய படுகொலைகளையும் அவர்கள் புரிந்திருக்கமாட்டார்கள்,’ என்று உணர்ச்சிவசப்பட்டார்New Saturday Review இதழ்களை அப்போது அவருக்குக் கொடுத்தேன். அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. ‘இவையெல்லாம் புலிகளின் பொய்ப் பிரச்சாரம். இவற்றையெல்லாம் நீங்கள் ஏன் காவிக்கொண்டு திரிகிறீர்கள்?’ என்று மிகவும் காட்டமாக எங்களைக் கேட்டார்.
‘இல்லை. இது காமினி நவரத்தின வெளியிடுவது. அவர் உங்களது நண்பர்தானே. அவரும் புலியா? இதனை நானும் றேச்சலும் இங்கே இருக்கிற மற்றை நண்பர்களும்தான் இங்கே வெளியிடுகிறோம்,’ என்று அவருக்குச் சொல்லும்போதே அவர் கோபத்துடன் எழுந்து தன்னுடைய அறைக்குப் போய்விட்டார். இந்தியப் படையினர் எத்தகைய அநியாயமும் புரியாதவர்கள், அவர்கள் இலங்கை வரும்போது ஒருகையைப் பின்புறம் வைத்துக்கொண்டு மறுகையில் காந்தியின் ‘சத்தியசோதனை’ நூலை ஏந்திக்கொண்டுதான் வந்தார்கள் என்று தீவிரமாக நம்புகிறவர்கள் இப்போதும் பலர் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தருவதல்ல.
யாழ். பல்கலைக்கழக நூலகத்தில் ஏராளமான இந்தியப் படையினர் மலங்கழித்தமை பற்றிப் பெயர் குறிப்பிடாமல் ஏ.ஜே. கனகரத்தினா New Saturday Reviewவில் எழுதியிருந்த கட்டுரை இந்திய, இந்தியப் படை ஆர்வலர்கள் பலரது கோபத்தைக் கிளப்பியிருந்தது. அந்தக் கட்டுரையில் நோபல் பரிசுபெற்ற எழுத்தாளரான வி.எஸ். நைப்பால் எழுதிய ‘An area of Darkness’ (1964) என்ற இந்தியப் பயண நூலில் இருந்து ஏ.ஜே. மேற்கோள் காட்டியிருந்தார். நைப்பால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ட்ரினாட் (Trinidad)டில் பிறந்து வாழ்ந்தவர். அவர் முதல் தடவையாக இந்தியாவுக்குச் சென்ற அனுபவப் பண்பாட்டு அதிர்ச்சி பற்றியதே அந்த நூல். இந்தியா எங்கிலும் பொது இடங்களில் மக்கள் மலம் கழிப்பது சாதாரணமாக இருந்தமையைக் கண்ணுற்ற நைப்பால், இந்தியாவைப் போகுமிடமெங்கும் சுரணையற்று மலங்கழிக்கும் ஒரு மிகப்பெரிய கூட்டமாக உருவகப்படுத்தி இருந்தார். அதற்காக நிறைய விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.
‘இந்தியர்கள் எல்லா இடங்களிலும் மலம் கழிக்கிறார்கள்; பெரும்பாலும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் மலம் கழிக்கிறார்கள்; கடற்கரையில் மலம் கழிக்கிறார்கள்; ஆற்றங்கரைகளில் மலம் கழிக்கிறார்கள்; தெருக்களில் மலம் கழிக்கிறார்கள்; அவர்களுக்கு ஒளிவுமறைவு தேவையே இல்லை,’ என்று நைப்பால் குற்றம்சாட்டியிருந்தார். இத்தகைய பின்னணியில் யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும் பல்கலைக்கழக நூலகத்திலும் இந்தியப் படையினர் மலங் கழித்ததில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்பதே கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
புலிகளுக்கும் இந்தியப்படைகளுக்கும் யாழ்ப்பாணத்தில் உக்கிரமான சண்டை நிகழ்ந்த வேளை காயப்பட்ட பொதுமக்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவர்களையும் இந்தியப் படையினர் பல சந்தர்ப்பங்களில் கொன்றனர். காயமுற்றவர்களையும் கொல்வதென்பது இந்தியப் படையினரின் நடைமுறையாக இருந்தது. இந்தியப் படையினரின் எறிகணைத் தாக்குதல்களின்போது கோவில்களில் தஞ்சமடைந்திருந்த மக்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. எனது அம்மம்மாவின் சகோதரி மகளான ராணி அக்காவும் அவர் குடும்பமும் சண்டிலிப்பாயில் இருந்தனர். எறிகணை வீச்சு மோசமாக இருந்ததால் அவர்களும் கோவிலில் தஞ்சம் அடைந்திருந்தனர். மோசமாகக் காயப்பட்டிருந்த ஒரு வயோதிபரை ஒருவரும் கவனிக்காத நிலையில் ராணி அக்காவின் கணவர் மருத்துவமனைக்குக் காரில் அழைத்துச் சென்றார். இடையில் இந்தியப் படையினர் காரை மறித்து, காரோடு அனைவரையும் எரித்தார்கள்.
1989 மே மாதம் நெதர்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் திரும்பினேன். சுன்னாகம் ரயில் நிலையத்திலிருந்து அளவெட்டிக்கு நானும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலாச்சாரக் குழுவில் ஒன்றாகப் பணியாற்றிய ஞானசேகரனும் வந்தோம். அளவெட்டி தலைகீழாக மாறியிருந்தது. எங்களுடைய வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் மூன்று இந்தியப் படை முகாம்கள் இருந்தன. அவர்களுடைய காவலரண்களையும் முகாம்களையும் கடக்காமல் எங்குமே போகமுடியாமல் இருந்தது. நான் ஊர் சேர்ந்த மறுநாள் இந்தியப் படையினர் வீட்டைச் சுற்றி வளைத்துவிட்டனர். ஊரில் புதிதாக யார் வந்தாலும் அவர்களுக்கு எப்படியோ விவரம் தெரிந்துவிடுகிறது என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நாட்டில் இல்லாமல் இருந்தேன் என்பதை எனது கடவுச்சீட்டைப் பார்த்து உறுதிசெய்த பிற்பாடு அவர்கள் திரும்பிச் சென்றனர்.
யாழ்ப்பாணத்தில் எனக்கு வேலை எதுவும் இருக்கவில்லை. சற்றர்டே றிவியூ வெளியீட்டாளர்களான நியூ ஈரா நிறுவனத்தினர் திசை என்னும் வார இதழை அப்போது வெளியிட்டு வந்தார்கள். மு. பொன்னம்பலம் ஆசிரியராக இருந்தார். அ. யேசுராசா முக்கிய பொறுப்பில் இருந்தார். இருவாரத்துக்கொருமுறை ‘ஏகாந்தன்’ என்ற பெயரில் ‘அங்கிங்கெனாதபடி’ என்று ஒரு பத்தி எழுத ஆரம்பித்தேன். எனினும் அரசியல் கட்டுரைகள் எதுவும் எழுத முடியவில்லை. கலை, பண்பாடு சார்ந்தே எழுத முடிந்தது. நிலைமை அவ்வளவு மோசமாக இருந்தது.
அளவெட்டியிலிருந்து யாழ் நகர் வரும் போதெல்லாம் பல இந்தியப் படை முகாம்களில் சைக்கிளை விட்டு இறங்கி நடந்து போக வேண்டும். இது ஆரம்பத்தில் எனக்குத் தெரியாதபடியால் தெல்லிப்பழையில் மகாஜனக் கல்லூரியின் சிற்பி என அழைக்கப் படும் அதிபர் தெ.து. ஜயரத்தினம் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த படைமுகாமில் இருந்த படையினர் எனது தலைக்கு மேலால் சுட்டார்கள். அன்றிலிருந்து, “சைக்கிள் சிற்; யூ வோக்” (Cycle sit; You walk!) என்ற அவர்கள் கட்டளை எனக்குத் தாரக மந்திரமாகிவிட்டது.
அந்த முகாமிலிருந்தவர்களும் அளவெட்டியிலிருந்த முகாம்களில் இருந்தவர்களும் பாடசாலைக்கு மாணவர்கள் செல்லும் நேரம் வரிசையாகத் தெருவால் நடந்துபோவார்கள். வேலிகளில் இருக்கும் பூவரசு, கிளுவை மரங்களில் கிளைகளை ஒடித்து அவற்றால் சைக்கிளில் செல்லும் பாடசாலை மாணவிகளுக்கு அடிப்பதை அவர்கள் வழமையாகக் கொண்டிருந்தார்கள். சிலர் தெருவின் குறுக்கே நின்று மாணவிகளின் மார்பகங்களையும் பிடிப்பார்கள். இவற்றையெல்லாம் வெறுப்போடும் கோபத்தோடும் பார்த்துக்கொண்டுதான் நான் செல்ல வேண்டியிருந்தது.
அளவெட்டியில் எமது பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கடைக்கு அருகாமையிலிருந்த இந்தியப் படை முகாம் சித்திரவதை முகாமாகவே பெரும்பாலும் இயங்கியது. எங்கள் ஊரில் இந்தியப் படையால் பிடிக்கப்பட்டு அங்கு கொண்டுசெல்லப்பட்டவர்களின் தாய், தந்தையர் சிலரோடு நான் மொழிபெயர்ப்பாளனாக அங்கு செல்லவேண்டியிருந்தது. அங்கிருந்த ஓர் அதிகாரிக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது. வதைக்கூடத்துக்குப் பொறுப்பாக ஒரு தமிழர் இருந்தாலும் அவர் பேசுவதற்கோ உதவுவதற்கோ வரவில்லை.
இக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் சிறுசிறு குழுக்களாக எல்லா இடங்களிலும் திரிந்தார்கள். இரவுகளில் திடீரென யாராவது வீட்டுக்குச் சென்று அன்றிரவு அங்கே தங்குவார்கள். அதிகாலையில் சென்றுவிடுவார்கள். இந்தத் தகவல் இந்தியப்படைக்குத் தெரிந்துவிட்டால் வீட்டுக்காரர்களைச் சுடுவார்கள்; இப்படியாகக் கொல்லப்பட்டவர்கள் ஏராளம் பேர். எனது பாடசாலை நண்பன் நிர்மலன், கொல்லப்பட்டதும் இப்படித்தான். அவனுடைய சாவீட்டுக்குக்கூட என்னால் போக முடியவில்லை. இந்தியப் படையோடோ அல்லது அவர்களுடன் இணைந்து இயங்கிய தமிழ் இயக்கங்களோடோ தொடர்பு வைத்திருந்தவர்கள், பழக நேர்ந்தவர்களை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றுவிடுவார்கள்.
இந்தியப் படையுடன் இணைந்திருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர்களில் ஒருவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தபோது ஏன் மாறிமாறி இத்தகைய படுகொலைகளில் ஈடுபடுகிறீர்கள் எனக் கேட்டேன். “நாங்கள் இருப்பதற்காகக் கொல்கிறோம். புலிகள் கொல்வதற்காக இருக்கிறார்கள் - அதுதான் வித்தியாசம்” என்றார். (அவர் சொன்னது ஆங்கிலத்தில்: We kill in order to exist; They exist in order to kill!)
யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த நாடக அரங்கக் கல்லூரியைச் சேர்ந்தவர்களும் நடிகர்கள் - நெறியாளர்களுமான வீ.எம். குகராஜாவும் ஜெயகுமாரும் இக்காலப் பகுதியிலேயே இந்தியப் படைகளால் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து நாடக அரங்கக் கல்லூரிக்காக அரங்கம் என்ற இதழை நடத்திவந்தனர். தெரு நாடகங்கள் நிகழ்த்துவதிலும் மிக்க ஈடுபாட்டோடு பணியாற்றியவர்கள். எனது நீண்ட நாள் நண்பர்கள். அவர்களுடைய சா வீடு முடிந்த ஒரு சில நாட்களிலேயே ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான இறைகுமாரனின் தாயாரும் இந்தியப் படைகளால் எங்கள் ஊரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இறைகுமாரனும் அவருடைய நெருங்கிய நண்பர் உமைகுமாரனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) அமைப்பினரால் 1982இல் சுட்டுக்கொல்லப் பட்டனர். இது பற்றியும் தமிழ்ப் போராளிகளது உட்கொலைகள், சகோதரப் படுகொலைகள் பற்றியது மான என்னுடைய கவிதை ‘யுத்த காண்டம்’ என்ற தலைப் பில் வெளியாகியிருக்கிறது (பார்க்க: ‘நீ இப்பொழுது இறங்கும் ஆறு’, சேரன் கவிதைகள் ஒரு நூறு. ‘காலச்சுவடு பதிப்பகம்’, 2000).
இந்தியப் படையாலும் விடுதலைப்புலிகளாலும் மற்றைய தமிழ் இயக்கங்களாலும் இந்தக் காலத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் பெயர்களும் முகங்களும் வாழ்வும் எமக்கு முழுமையாகத் தெரியாது. இந்தத் தகவல்களையும் கதைகளையும் சொல்லவும் தரவுமே இன்றும் பலர் அஞ்சுகின்றனர். தம்மால் முடிந்த அளவுக்கு விவரங்களை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) தமது அறிக்கைகளில் பதிவு செய்திருக்கிறார்கள். அவை இணையத்தில் கிடைக்கின்றன.
1989 நடுப்பகுதியில் எனது தங்கையின் திருமணப் பேச்சு வார்த்தைகள் தொடர்பில் மட்டக்களப்பு செல்ல நேர்ந்தது. அப்போதுதான் ‘தமிழ்த் தேசிய இராணுவத்துக் கான’ கட்டாய ஆட்சேர்ப்பில் இந்தியப்படையுடன் சேர்ந்தியங்கிய இயக்கங்கள் இறங்கியிருந்தன. வாகனங்களை இடைமறித்து இளைஞர்களையும் மாணவர்களையும் கடத்திச்செல்வது, வீடுகளுக்குள் புகுந்து கடத்திச்செல்வது என மிகத் தீவிரமாக ‘ஆள்பிடி’ நடந்த நேரம் அது. மட்டக்களப்பு செல்லும் வழியில் வவுனியாவில் என்னையும் கட்டாயமாக வாகனத்திலிருந்து இறக்கிப் ‘பயிற்சி’ முகாமுக்கு இழுத்துச் சென்றார்கள். என்னுடைய எந்த நியாயத்தையும் அவர்கள் கேட்பதாயில்லை. என்னுடைய தலைமயிரையும் குறுகத் தறித்துவிட்டார்கள்!
முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் ஒருவரையும் என்னால் அடையாளம் காணமுடியவில்லை. அவர்கள் பிடித்துவைத்திருந்தவர்களில் நான்தான் வயது சற்றுக் கூடியவனாக இருந்தேன். இரவு எங்களை வேறு ஓர் இடத்துக்கு மாற்றுவதாக இருந்தது. எங்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் வந்த வேளையில் தற்செயலாக எங்களோடு பல்கலைக்கழகத்தில் படித்த நண்பன் கணேசமூர்த்தியைக் கண்டேன். அவன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவன். கலைத்துறைப் பட்டதாரி. ‘மாயமான்’ என்ற எமது வீதி நாடகத்தை 1985இல் பல இடங்களில் நிகழ்த்த உதவியவன். நான் பிடிபட்டிருந்த முகாம் அவர்களுடைய இயக்கத்தினது அல்ல. எனினும் என்னை மீட்டு மட்டக்களப்புவரை தனது வாகனத்தில் கொண்டுவந்து சேர்த்தான். பின்னர் சில வாரங்களில் அவனையும் அவனோடு இருந்த வேறு சிலரையும் மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் கொன்றுவிட்டார்கள் என்ற சேதி என்னை வந்தடைந்தது.
நினைவில் அழியாத இப்படியான நிகழ்வுகள் தந்த அதிர்ச்சி, துயரம், கையறு நிலை, கோபம், ஆற்றாமை எல்லாவற்றினதும் பிரதிபலிப்பாகவும் சாரமாகவும் இந்தியப் படைகளின் காலத்தில் நான் எழுதிய கவிதைகளின் தொகுதிதான், ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்.’ அப்போது இதனை யாழ்ப்பாணத்திலும் வெளியிடமுடியவில்லை; கொழும்புவிலும் வெளியிட முடியவில்லை. இந்தியாவிலும் வெளியிட முடியவில்லை. நண்பரும் கவிஞரும் திசை ஆசிரியருமான மு.பொ. கவிதைகள் ஒரு சிலவற்றையேனும் திசை இதழில் வெளியிடத் தயங்கினார். கருத்துச் சுதந்திரத்தின் நிலை அப்படி! எனினும் எனது நீண்டகால நண்பர் வேலு (ஜெயமுருகன்) எப்படியாவது இந்தத் தொகுதியை வெளியிட்டுவிடுவோம் எனத் தீர்மானித்தார். அவர் ஒரு கலை ஆர்வலர். வேலு, ஈரோஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஈழ மாணவர் பேரவையின் வடமராட்சிப் பொறுப்பாளராக இருந்தவர். ஓவிய நண்பரொருவர் பொருத்தமான அட்டைப்படம் ஒன்றையும் வரைந்து தந்திருந்தார். கவிதைகள், அட்டைப்படம், எனது முன்னுரை எல்லாவற்றையும் சேர்த்து நூலின் மாதிரி வடிவமைப்புடன் அச்சகத்துக்கு எடுத்துச்செல்லும் வழியில் இந்தியப் படைகளுடன் ஒத்தாசையாக வேலை செய்துவந்த ஈழ மக்கள் விடுதலை முன்னணியினர் (EPRLF) வேலுவைக் ‘கைது’ செய்தார்கள். யாழ்ப்பாணத்தில், ‘எலும்புக்கூடுகளின் ஊர்வல’த்தின் முடிவு அப்படியாயிற்று. வேலுவை யாழ்ப்பாணம் அசோகா ஹோட்டல் முகாமுக்குக் கொண்டுசென்றனர். எனினும் ஈரோஸ் தலைவர் பாலகுமாரன் தலையீட்டால் வேலு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்’ பிற்பாடு, ‘தேடகம்’ நண்பர்களால் 1990இல் கனடாவில்தான் வெளியிடப்பட்டது.
1989 பிற்பகுதியில் அப்போது நாட்டின் அதிபராக இருந்த பிரேமதாச, புலிகளுடன் இணக்கத்துக்கு வந்து இந்தியப் படையினரை வெளியேறச் சொன்னார். 1990 மார்ச் மாத முடிவுக்குள் இந்தியப் படையினர் வெளியேறிவிடுவதாக உடன்பாடு எட்டப்பட்டது. பிற்பாடு நான் கொழும்பு வந்து சேர்ந்தேன். அப்போதுதான் புதிய சற்றர்டே றிவியூ என்பதைத் திருப்பியும் கொண்டுவருவோம் என காமினி நவரத்ன சொன்னார். சில நண்பர்கள் நிதியுதவி செய்தனர். பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.
மார்ச் மாதம் 1990இல் இந்தியப்படைகள் வெளியேறியபோது அவர்களுக்குப் ‘பிரியாவிடை’ கொடுக்க நானும் நண்பர் குகமூர்த்தியும் ஜேர்மன் ஊடகவியலாளர் வால்டர் கெல்லரும் திருகோணமலை சென்றோம். துறைமுகத்துக்குள் போக அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. வரிசையாக உள்ளே சென்றுகொண்டிருந்த இந்தியப் படையினரிடம், ‘நேரே காஷ்மீருக்குத்தான் போகிறீர்களா?’ என்று வால்டர் கெல்லர் புன்சிரிப்புடன் கேட்டார். நல்ல காலம். எங்களைக் கடந்துசென்ற இந்தியப் படைக் குழுவுக்கு இந்தியைவிட வேறு மொழி தெரிந்திருக்கவில்லை என்பதால் தப்பித்தோம். இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் மூண்டுவிடும் என்பது தெரிந்திருக்கவில்லை. எனினும் இலங்கைச் சூழலில் சமாதானம் ஆயுள் குறைவானது என்பது எப்போதும் போலவே அப்போதும் எனக்குத் தெரிந்திருந்தது. இது இப்போதும் உண்மைதான்.
இந்தக் கட்டுரையின் சுருக்கமான வடிவம் கனடா தாய்வீடு ஜூலை மாத இதழில் வெளியானது.
மின்னஞ்சல்: cheran@uwindsor.ca

No comments:

Post a Comment