Friday, October 9, 2020

விமானம் பறந்து கொண்டிருக்கும்போது கோளாறு ஏற்பட்டால் எடை குறைப்புக்காக எரிபொருள் வெளியேற்றப்படும் என்பது உண்மையா?


அது மிக உண்மைதான் உறவுகளே! ஒரு விமானம் புறப்படும்போது, அதன் எடையில் பாதி எரிபொருளாக இருக்கக்கூடும். இதற்கு fuel fraction என்று பெயர் (உதாரணமாக ஏர்பஸ் A330 fuel fraction: 45%; போயிங் 747 fuel fraction: 48–56%).

அதனால் ஒரு விமானம் நார்மலாக தரையிறங்கும் போது, அதன் எடை அதன் புறப்படும் எடையில் பாதி அளவுதான் இருக்கும். எனவே விமானங்களின் லாண்டிங் கியர் இந்த (பாதி) எடைக்காக வடிவமைக்கப்படும்.

விமானம் முழு எடையுடன் தரையிறங்கினால் இரண்டு விதமான ஆபத்துகள் ஏற்படலாம்.

  1. லாண்டிங் கியர் உடையக்கூடும். இதன் விளைவாக, பயணிகளுக்கு ஆபத்து ஏற்படலாம்.
  2. மேலும், லாண்டிங் கியர் உடைந்தால் விமானம் தீ பிடிக்கக்கூடும். அதுவும் முழு எரிபொருள் தொட்டியுடன் தீப்பிடித்தால், விமானம் வெடிக்கக்கூடும். அதனால் விமானம் மட்டுமல்ல, பயணிகள் மட்டுமல்ல, விமான நிலையத்திற்கே ஆபத்து ஏற்படலாம்.

எனவே விமானம் முழு எடையுடன் தரையிறங்க வேண்டுமென்றால் எரிபொருளை முதலில் டம்ப் செய்வது வழக்கம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, சிகாகோவிலிருந்து பாரிஸுக்கு 400 பயணிகளுடன் போயிங் 747 விமானம் பயணம் செய்து கொண்டிருந்தது. ஒன்பது மணி நேர பயணம்.

விமானம் மாலை 6 மணிக்கு சிகாகோவில் இருந்து புறப்பட்டது. 30 நிமிடங்கள் கழித்து, ஒரு பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. எனவே பைலட் சிகாகோவுக்குத் திரும்புவதாக அறிவித்தார்.

அதிர்ஷ்டவசமாக விமானம் மிச்சிகன் ஏரியின் மீது பறந்து கொண்டிருந்தது. பைலட் ஏரியின் மையத்தை நோக்கிச் சென்றார். அங்கு எரிபொருளைக் கொட்டிய பிறகு, 8 மணிக்கு சிகாகோவுக்கு திரும்பியது.

மாரடைப்பு ஏற்பட்ட பயணி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இரவு 10 மணிக்கு விமானம் மீண்டும் கிளம்பியது. அப்போது பைலட்என்ன நடந்தது என்பதை பயணிகளுக்கு விரிவாக விளக்கினார்.

  1. ஏரியில் எரிபொருளைக் கொட்டுவதற்கு சுற்றுச்சூழல் துறையிடம் (Environmental Protection Agency) முதலில் அனுமதி பெறப்பட்டது. அவர்கள் எரிபொருளால் ஏரிக்கு குறைந்த பட்ச பாதிப்பு ஏற்படக்கூடிய இடத்தை தேர்வு செய்தனர்.
  2. அடுத்து, அங்கே படகுகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த ஒரு சிறிய விமானம் அனுப்பப்பட்டது.
  3. அதற்கு பிறகு, எந்த உயரத்தில் இருந்து கொட்டினால் குறைந்தபட்ச சேதம் ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது (அதிக உயரம் என்றால் சேதத்தின் பரப்பளவு அதிகமாகும். குறைந்த உயரம் என்றால் விழும் இடத்தில் எரிபொருள் செறிவு - concentration - அதிகமாக ஆகும், மேலும் எரிபொருள் ஆவியாவதற்கு நேரம் இருக்காது).
  4. பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் லிட்டர் எரிபொருள் 50 சதுர மைல் பரப்பளவில் 10,000 அடியிலிருந்து கொட்டப்பட்டது.
  5. அதன்பின் விமானம் சிகாகோவில் எமர்ஜன்ஸி லாண்டங் செய்ய அனுமதிக்கப் பட்டது.

இதெல்லாம் நடந்து கொண்டிருந்தபோது, ஏர்லைன் பணியாளர்கள் அமைதியாக ட்ரின்க்ஸ் டின்னர் பரிமாறியது ஆச்சரியம்!  அதைவிட இன்னுமொரு ஆச்சரியம், இந்த திடீர் பயணமாற்றம் எவ்வளவு செலவாகும்? அதுவும் ஒரு பயணிக்கு! மனித உயிர்களின் மதிப்பு அவ்வளவு இது இராணுவத்துக்கோ வன்முறை கும்பலுக்கோ அதை பின்னால் இருந்து இயக்குகின்ற அரசியல்வாதிகளுக்கோ எங்கே புரியப்போகின்றது? அன்புடன் பேசாலைதாஸ் 

No comments:

Post a Comment